Saturday, March 19, 2011

TAMIL ARTICLES

வைகுண்ட ஏகாதசி







‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.

புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.

இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.

முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.

ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.














கணவன் - மனைவி ஒற்றுமைக்கு கேதார கௌரி விரதம்



பிருங்கி முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இ ல்லாத நாயகன் என் கயிலைநாதன்தான்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுட ன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் - பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்தி ருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மன வருத்தத்தைத் தந்தது.

எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெரு மானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.

வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார். என்ன செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள். தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள் முடமாகிப் போக சபித்தாள்.
அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார். அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி, பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித் தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை. ‘தந்தேன்’என்றார் மகாதேவன்.

“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண் டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.

இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள்.

கேதரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.

கணவன் - மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள்.

அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ, பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ - பார்வதி படத்தின் முன் பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன் - சக்தி பாடல் களைப் பாடவேண்டும். ‘ஓம் நமசிவாய, சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்பதால் பட்டினி இருக்க முடியாது. ஆகவே, அன்று எடுத்துக் கொள்ளும் எந்த ஆகாரத்தையும் குறைந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

முடிந்தால், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம், கு டும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயசம் அல்லது அப்பம் நைவேத்யம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக் கொள்ளலாம்.

அதோடு உலகத்தில் உள்ள எல்லா தம்பதியரும் தமக்குள் அன்யோன்யம் பெருக்கி, பிரியாமல் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வது சிறப்பு.

No comments:

Post a Comment