Tuesday, June 14, 2011


மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.

வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!

உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.

கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.

இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.


No comments:

Post a Comment