ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.
* 'சாந்தம்' என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.
* சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.
No comments:
Post a Comment