1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
2. இக்குலத்தில் பிறந்தோர், அக்குலத்தில் பிறந்தோர் என்று வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம்.
4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது.
5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.
6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் மிகு சிறப்பு போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நக்ஷத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு.
7. கடையில் வாங்கும் தேங்காய் எல்லாம், முதற்பார்வைக்கு ஒன்றாகவே தோன்றினாலும், இலங்கையில் விளைந்த (கொழும்பு)த் தேங்காய்க்கும், கேரள மலைச்சாரலில் விளைந்த தேங்காய்க்கும், பொதுவாக, மழை குறைவான, தமிழகத்தில் விளையும் தேங்காய்க்கும், நுண்ணிய வித்தியாசம் இருப்பது போலவே, வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.
8. பொதுவாக, எல்லா வகை மருத்துவமும், அவ்வழி பின்பற்றும் மருத்துவமும் நமக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் நிவாரணம் அளித்தாலும் ஒவ்வொரு வகை மருத்துவ இயலுக்கும், ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. இது போலவே தான் ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், பலன்களும் ஆகும். பயன் குறைவு - கூடுதல் என்பதல்ல. மாறாக ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.
9. ஏழ்மை - நிவாரணம், நோய் எதிர்ப்பு நிலைக் குறைவு - தடுப்பு, தொழுநோய் தவிர்ப்பு, புலியினம் காப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்கு நம் அன்றாடச் செயல்பாடுகள் பலவும் உதவினாலும் கூட; மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அதிகமாகப் பெறுவதற்காகவே சில தினங்களில் முனைப்புடன் செயல்படுகிறோம். இது போன்ற நிலையையே விரத அனுஷ்டிப்பிலும் காண்கிறோம்.
10. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்குப் பின்பும், நோயாளிக்கு முழுமையான ஆரோக்கிய நிலை ஏற்படுவதற்காக, சில நாட்களுக்கு உணவுக் கட்டுப்பாடும், குறைப்பும், தவிர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இது போலவே தான், ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அன்றைய உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம்.
11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (எல்லா விரதங்களுமே) குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம், துன்பப்படுவோர் நன்மை பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. அவ்வல்லல்களுக்குக் காரணமாகும் தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதே, விரத மேன்மை விவரிப்புகளின் நோக்கமாகும்.
12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது. ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு மாணவர்களுக்கு ஒரே பாடத்தையே வழிவழியாக கூறிவருகின்றனர். இது போன்றதே ஏகாதசியைப் பற்றிய வரலாறுகளும் ஆகும்.
13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வதுநல்லதே என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை. உண்ணாநோன்பே அன்று மிக முக்கியமானதால், இங்கும் அங்கும் ஓடி அதிகச் சோர்வு அடைவதை விட வீட்டிலேயே, மௌனமாக இருந்து, மானஸ பூஜை அல்லது நாமஜபம் செய்வது எளிதாகும். வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது. பாராயணத்தால் பயன் அடைவதோடு, முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம்.
ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம்:
தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ
த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ
துவாதசி பாரணை - நெறிமுறைகள்: ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும். துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை. அல்ப (மிகக் குறைவாகவே) துவாதசி திதி இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம். இப்படி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும். இப்படி ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும்.
துவாதசி பாரணை சங்கல்ப மந்திரம்
ஏகாதஸ்யா நிராகார ஸ்தித்வா அகம் அபரேஹனி
போக்ஷ்யாமி புண்டரீகாட்ச சரணம்மே பவாசயுத
துளசி நீர் அருந்திடுமுன்பு துதி
அஷ்டாக்ஷரேண மந்த்ரேண த்ரிஜப்தேன அபிமந்த்ரிதம்
உபவாச பலம் பிரேப்சு பிபேத் தோயம் சமாஹித
சில விதி தளர்வுகள்
எல்லா தேய்பிறை, வளர்பிறை ஏகாதசிகளிலும் எல்லோருமே, முற்றும் உண்ணாமையை மேற்கொள்வதே சிறப்பு. இருப்பினும், இல்லறத்தாரின் அன்றாட பணி நிர்பந்த நிலைகளையும், அதனால் கொஞ்சமாவது உணவு ஏற்க வேண்டிய நிலையையும் கருதி, சாஸ்திரங்கள் சில விதி தளர்வுகளை அனுமதிக்கின்றன. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் உண்ணாமை யாவர்க்கும் கட்டாயம். பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை.
பலாகாரம் (பழ ஆகாரம்) = பழங்கள் உண்பது
பல - ஆகாரம் = இட்லி, தோசை, பூரி என்று மாறி, அதுவும்
பல - காரம் = உப்பு-உறைப்பு கூடிய உணவாக மாறிவிட்டது.
இரவில், நமக்குப் பிடித்தமான பல காரங்களால், நம் பசியைத் தூண்டி விட்டு, உணவு வகைகளை அதிகமாக மனதாறச் சாப்பிடுவதற்காக, விரதம் என்ற பெயரில் பகலில் உண்ணா நோன்பு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே.
பக்குவப்படுத்தாத, பழ வகைகளிலும், புளிப்பு இல்லாதவற்றை ஏற்கலாம். இயன்றவரை, பழங்களையும் தவிர்த்து பால் மட்டும் (காபி, டீ அல்ல) அருந்தலாம்.
நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது.
ஏகாதசியன்றே வருகின்ற சில விரதங்கள்: சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியன்று சங்கரர் ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி ஒன்றாகவே வருகின்றன. சிவனார் ஒரு முறை ஜோதியாக மாறியதும், வேறு முறை திரிபுர அசுரர்களை அழித்ததும், திருமால் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டதும், கார்த்திகை மாதம் அண்ணாமலை தீபத்தன்றே நாமும் முப்பெரும் விழா, ஐம்பெரும்விழா கொண்டாடுகிறோம். இது போலவே சில ஏகாதசிகளில் வேறு விரதங்களும் கூடுகின்றன.
1. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு.
2. மாதம், பிறை பாகுபாடின்றி எந்த ஏகாதசியில் அருணோதய நேரத்தில் அதிகாலை (4 . 30 - 6) தசமி திதி இருக்கிறதோ அன்று அத்திமரத்தால் ஆன பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து விஷ்ணுவை வழிபடுவதை வஞ்சுள ஏகாதசி விரதம் என்பர்.
3. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்.
4. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று கோபூஜை செய்வதை வைதரணி விரதம் என்பர்
ஏகாதசியும் சிரார்த்தமும்: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர். இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது.
வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கமும்: எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், பால்குட விழா என்றால் பழனியும், கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது. பிரம்ம லோகத்தில் பூஜை செய்து வந்த திருமாலின் திருவுருவை பிரமன். சூரிய வம்ச அரசனான. இக்ஷ்வாகுக்கு கொடுக்க, பிற்காலத்தில், அதை ராமபிரான் விபீஷணனுக்கு கொடுக்க, அவன் பெருமாள் திருமேனியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது, இறைவன் திருவிளையாடலால் ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய பூமியில் நிலைத்து விட்டது. அங்கு தர்மவர்மனால் எழும்பியமுதற்கோயில், ஒரு காலத்தில் காவிரி வெள்ளத்தால் மறைந்து விட்ட போது தெய்வீகக்கிளி ஒன்று, அவ்விடத்தின் மேன்மையை கிள்ளிவளவனுக்கு தெரிவித்தது. அவன் புதுப்பித்த கோயிலையே இன்று காண்கிறோம். அரங்கனே திருவரங்கத்தை வைகுண்டமாகக் கருதியதால் தான் இன்றும் பகல்பத்து, ராப்பத்து என்று வைகுண்ட ஏகாதசியின் போது மிகமிக விரிவான திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை வழிபடுவோர் வைகுண்டத்துக்கே செல்வதாக உணர்த்துகின்ற நிகழ்வே வைகுண்டவாசல் அல்லது பரமபதவாசல் நுழைகின்ற வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும், பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும், வாழ்வில் ஒருமுறையாவது அவ்விழாவில் கலந்து கொள்ள பெருமாள் அருளட்டும்
No comments:
Post a Comment