Saturday, December 24, 2011

அச்சம் போக்கும் அஞ்சனை புதல்வன்

                        அவதாரங்கள் என்று சொல்லும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தசாவதாரம். சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதாரங்களை எடுத்து இருக்கிறார்கள். அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம் ஆகியவற்றை எடுத்துக் காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயப் பெருமான் என்பது சாஸ்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சன்னிதி இருக்கும். இதுதவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனி கோவில்களும் உள்ளன. தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைபோல் வடக்கே ஆஞ்சநேயருக்கு அதிக ஆலயங்கள் உள்ளன.                      அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோ உறுதி போன்றவற்றை அருளுபவர். அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்று சிறப்பித்துக் கூறுவார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் வரப்பிரசாதி என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் அதிகம்.

 
பஞ்சபூத தத்துவம்:
               
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்ரன் என்பதால் காற்றை வென்றவர் ஆகிறார். சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார்.
                 பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார்.

             வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார்.
             வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார். இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், எங்கும் எதிலும் அடங்குவதில்லை.
                   ராமா என்ற இரண்டு எழுத்தில் கட்டுண்டு கிடக்கிறார். தீய சக்திகள், காத்து, கருப்பு, பூத பைசாசங்கள், செய்வினை, மனபேதலிப்பு, சகல தோஷ தடைகளை நீக்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். வடை மாலை சாற்றுவதற்கு காரணம் கிரக தோஷத்தை நீக்குவதற்காக என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். ராகுவிற்குரிய உளுந்து, சனிக்குரிய எண்ணெயில் செய்த வடையை 108 முதல் 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக சாற்றுவதால் கிரக தோஷ தடை விலகுவதாக ஐதீகம்.


                      கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை, குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதியர் சேர தேங்காய் மாலை, தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை, தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு, குழந்தை பாக்யம் கிட்ட சந்தன காப்பும் மிக முக்கியமான பிரார்த்தனை முறைகளாகும். வாஸ்து கோளாறு உள்ள இல்லங்களில் வீட்டின் வாசல்படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகின்றன. அனுமனை சொல்லின் செல்வர் என்று சிறப்பித்து கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளர்களாக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். இந்த அனுமன் ஜெயந்தியில், அஞ்சேல் என்று ஆசி கூறி அபயம் அளிக்கும் அனுமன் பாதம் பணிவோம். அனுமன் ஜாதகத்தை வைத்து பூஜிப்பதால் வளங்களும், நலங்களும் வந்து சேரும்

No comments:

Post a Comment