சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவம் என்பதன் பொருள்
சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன? யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
லிங்கோத்பவரின் அடியும் முடியும் புதைந்த ரகசியம்
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
மகாபாரதத்தில் சிவராத்திரி
மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான். இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் சுச்வரன் என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு இனியகுரல் என்று பொருள். ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது. பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான். பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான் சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான். வேடன் ஆனாலும் காட்டில் மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது. அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை கவனிக்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது. அபிஷேமாகவும், அர்ச்சனையா கவும் ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது
No comments:
Post a Comment