Sunday, January 8, 2012

காலம் எனும் குரு போதித்த பாடம்

                   
                         உலகில் எதை வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கூட சரித்து விடலாம். ஆனால், தன்னைத் தியாகம் செய்வதுதான், தான் எனும் அகந்தையை துறப்பதுதான் மிகக் கடினமானது. ஒரு சைன்யத்தையே எதிர்கொள்பவனால்கூட, அகங்காரத்தை தூக்கிப் போடுவது முடியாத காரியம். பகவான் எனும் யாக குண்டத்தில் தன்னையே ஆகுதியாக கொடுப்பதுதான் உண்மையான ஆத்மிகம். அதுவே சரணாகதி. சகல வேதங்களின் சாரமே இந்த சரணாகதிதான். எல்லா யக்ஞங்களின் அடிப்படை தத்துவமே தன்னையே கொடுப்பதின் புற வெளிப்பாடுதான். ஆனால் அகந்தையை அகற்றுவது அவ்வளவு எளிதா என்ன? ஜென்ம ஜென்மமாகத் தொடர்ந்த வாசனைகளை கண நேரத்தில் சுண்டி எறிந்துவிட முடியுமா? இவையெல்லாம் பல ஜென்மத்து வாசனைகள் என்று அறிந்து கொள்ளவே சில ஜென்மங்கள் ஆகுமே! இந்த விழித்தலை, உணர்தலை உருவாக்குபவரே குரு எனப்படுகிறார். குரு மானிட உருவில் அல்லாது எவ்வுருவில் வேண்டுமானாலும் வருவார். அப்படித்தான் தத்தாத்ரேயருக்கும் பல குருக்கள் வந்து போதித்தனர். இருக்கும் வாசனைகளிலேயே அழகானதும் ஆபத்தானதும் காமம்தான். இந்த கர்ம வாசனையை ஒரு தாசியே பேசாமல் பேசி போதித்திருக்கிறாள்!                                 தேகப் பற்றே இல்லாத ஞானிகள் சர்வ சகஜமாக சஞ்சரிக்கும் விதேக தேசத்தில், பிங்களா எனும் தாசி இருந்தாள். நன்கு அலங்கரித்துக் கொண்டு மயக்கும் மாலை வேளையில் வீட்டின் வாயிலில் வந்து நிற்பாள். போவோர் வருவோரை கண் வலையில் வீழ்த்துவாள். வந்தவர்கள் அவளிடம் சந்தோஷம் பெற்றார்கள்; சொத்துகளை இழந்தார்கள். அழகும் செல்வமும் கொடுத்த களிப்பினால் அவளுடைய அகந்தை கிளைவிட்டுப் பரவியது. ஆனால், காலம் எனும் குரு அவளை சோதிக்கத் தொடங்கினான். ஒருநாள் மாலை வழக்கம்போல அதிசுந்தரியாக வாயிலோரம் வந்து நின்றாள், பிங்களா. தனக்காக பலர் காத்திருப்பார்கள் என்று சற்றே எட்டிப் பார்த்தாள். ஆனால் யாரும் இல்லாதது பார்த்து இருண்டாள். என்ன ஆயிற்று இந்த ஆடவர்களுக்கு! மீண்டும் உள்ளே சென்றாள். வருபவர்கள் யாராக இருந்தாலும் இனி உள்ளே வரட்டும் என்று பெருங்கதவை சாத்தினாள். நாழிகை ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கதவும் தட்டப்படவில்லை. மீண்டும் வாயிலுக்கு வந்தாள். கோபத்தோடு சுற்றும் முற்றும் நோக்கினாள். காமமும் கோபமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல. அடக்கிய காமம் கோபமாக வெளிப்படும். ஒன்றை மறைத்தாலும் வேறுவிதமாக வெளிப்படும். இன்று யாரும் வராமல் போய்விடுவார்களோ என்று காமத்தால் தவித்தாள். அந்த தீவிரம் அவளை நடுத்தெரு வரை பிடித்துத் தள்ளியது. தெருவில் சென்று ஆடவரைத் தேடும் அளவுக்கு அலைக்கழித்தது. மெல்ல தெருவின் மையத்திற்கு வந்தாள். இருளில் இவளை யாரென்றே பலருக்குத் தெரியவில்லை. அங்கும் யாரும் இவளை நெருங்கவில்லை. வீட்டிற்குள் புகுந்தாள். எந்த ஆடவனாவது என்னை நாடி வரமாட்டானா என்று உள்ளுக்குள் புழுங்கினாள். ஊர் உறங்கியது. ஆனால், பிங்களா நித்திரை இழந்தவளாக வாயிலுக்கும் அறைக்குமாக நடந்து கொண்டிருந்தாள். சட்டென்று கண்ணாடியில் தன் உருவத்தை தானே பார்க்க நேர்ந்தது. அதிர்ந்தாள். யார் அந்தப் பெண் இத்தனை கோபமாக என்னை பார்க்கிறாளே என்று பயந்தாள். அது தன் உருவம் என்று சுய உணர்வுக்கு அடுத்த கணமே திரும்பினாள். ‘நான் கோபப்படும்போது இத்தனை அசிங்கமாக இருக்கிறேனா...? என்னை நான் பேரழகி என்றல்லவா நினைத்திருந்தேன். எங்கே என் அழகு?’’ என்று மீண்டும் கண்ணாடி முன் நின்றாள். வடித்து வைத்த சிலையழகு சிதறிப் போயிருந்தது. கண்களில் காமமும் கோபமும் சேர்ந்து கோரத் தாண்டவம் ஆடின. தன் மேலேயே மெல்லிய வெறுப்பு வந்தது.
நான் ஏன் இப்படி ஆனேன்? இத்தனை நாள் இல்லாத கோபம் இன்று எதனால் உண்டானது? ஆடவரின் சங்கமம் இல்லாது ஏன் என்னால் இருக்க முடியவில்லை? இது மட்டும்தான் சுகமா? ஆடவனால் கிடைக்கும் சுகம் வந்து போகும்படியாகத்தானே இருக்கிறது? அப்போது என்றும் நிலையான சுகம் எங்கிருக்கிறது? கேள்விகள் அவள் உள்ளத்தை குடைந்தன.
              அங்கேயும் இங்கேயும் வீட்டிற்குள்ளேயே அலைந்தவள் நிதானமானாள். ஓரிடத்தில் அமர்ந்தாள். இத்தனை நாள் நான் ஆடவனை ஜெயித்தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் என்னிடமே தோற்றிருக்கிறேன் என்பதை அறிகிறேன். என் அறிவீனம், என்னை ஆதிக்கம் செய்து, பாழும் காம சுகத்தை நிலையானது என்று நினைக்க வைத்தது. ஆனந்தம் என்கிற பெயரில் பெரும் துக்கத்தை அல்லவா சுமந்து கொண்டிருந்தேன். காமம் எனும் சுமையை இறக்க முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறதே. ‘ச்சே... என்ன பிழைப்பு இது?’ என்று வெறுப்படைந்தாள்.
                           விஷயங்களின் மேல் ஏற்படும் வெறுப்பே வைராக்கியம். இது எத்தனை சுகத்தை அளித்தாலும் தூக்கி எறிய வேண்டும் என்கிற வைராக்கியம் அவளுக்குள் துளிர்த்தது. இதுவரை உடம்பினால் வரும் சுகம்தான் உண்மை என்றிருந்தவள் தேகம் என்பது என்ன
என்பதை உண்மையாக உணர்ந்தாள்.

                                      எலும்புகள் மூங்கில்கள் போல குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கிறது. காய்ந்த மரத்தை நிறுத்தியதுபோல கால்கள். ரோமங்களாலும் தோலினாலும் போர்வைகள். மல மூத்திரம், ரத்தம், சளி நிறைந்த கூடு. ஒன்பது துவாரங்கள் கொண்ட இந்த மனித சரீரத்தையா நான் சுகமென்றும், சாசுவதமென்றும் நினைத்திருந்தேன்! நான் வசிப்பது விதேக தேசத்தில். தேகப் பற்றுடையவர்கள் வெகு சிலரே உள்ள ஆனால் விதேகர்கள் நிறைந்த புண்ணிய பூமி. இங்கு வசித்துக் கொண்டு உடலினால் வரும் சுகத்தை நிரந்தரம் என்று வாழ்கிறேனே... என்னை விட மூடபுத்தியுள்ளவள் யார் என்று அடுத்தடுத்து கேள்விகள்... வைராக்கிய விருட்சம் வளர்ந்தது.

                  பிங்களா தேகத்திலிருந்து மனோ மண்டலத்திற்கு நகர்ந்தாள். மனதால் தான் என்ன செய்கிறோம் என்று விசாரம் செய்தாள். இப்போது யாரை நான் வரிப்பது என்று யோசித்தாள். அச்சுதா... நாராயணா... மாதவா... என்று இறைவனின் திருநாமங்கள் உள்ளத்தில் தாமாகத் தோன்றின. ஆஹா... அச்சுதனான எம்பெருமானை விடுத்து வேறு புருஷனுடன் இத்தனை நாள் கூடியிருந்தேனே என்று துக்கப்பட்டாள். என்னோடு இத்தனை நாட்கள் இருந்தவர்கள் என் துக்கத்தின்போது எங்கு போனார்கள்? இவர்களெல்லாரும் இத்தனை பிரியமாக இருக்கிறார்களே என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேனே. காமமில்லாமலும் சுகமாக இருக்கலாம் என்று யாரும் எனக்கு போதிக்கவில்லையே. ஆனால், நான் இதுவரை அடைந்திராத இந்த வைராக்கியத்தை எனக்கு அருளியவர் யார்? துக்கம் வைராக்கியத்தை கொடுத்தது. முதிர்ந்த வைராக்கியம் விவேகத்தை அளித்தது. விவேகத்திலிருந்து தியானம் உருவானது. நாவை கூட அடக்கி விடலாம். இசையைக் கூட தூக்கிப்போட்டு விடலாம். கண்ணை கூட கட்டிக் கொண்டு விடலாம். மூக்கிற்கு முகராதே என்று கட்டளையிடலாம்.
                               
ஆனால், காமத்தை தூக்கி எறிவது என்பது அத்தனை சுலபமானதல்ல. ஆண், பெண் என்கிற பேத உணர்வு இருக்கும் வரை காமம் இருக்கும். அடக்கி விட்டேன், ஜெயித்து விட்டேன் என்று நினைப்போரை ஆழிப் பேரலைபோல காமம் தாக்கி கவிழ்க்கும். மதம் கொண்ட யானைபோல மிதித்து விட்டுப் போகும். ஆனால், பிங்களா காமம் எனும் சக்தியை இறைவனை நோக்கி திருப்பினாள். எனக்கு வேறு ஆடவன் வேண்டாம். என் பரம புருஷன், நாராயணனே. நான் கலந்தால் இனி அவனோடுதான். என் உடலும் உள்ளமும் அவனுக்கு மட்டும்தான் என்று காமத்தை, உயர்ந்த பக்தி நிலைக்கு கொண்டு போனாள். காமம் என்கிற அகங்காரத்தை தாசி எனும் பாவத்தோடு இறைவனிடம் சரணாகதி செய்தாள். அந்த
சரணாகதியில் காமம் சூரியனைக் கண்ட பனியாக ஆவியாகியது. ‘‘யது மன்னா... எனக்கு ஆச்சரியம் என்ன தெரியுமா? அதுவரை இறைவனையே நினைக்காத தாசிக்கு சில நாழிகைகளுக்குள் வைராக்கியத்தோடு சேர்ந்த ஞானம் உதித்தது. ஆனால், இறைவனை அடையப்போகிறேன் என்று சொல்லும் மனிதர்களுக்குத்தான் காமத்தை விட மனதில்லை’’ என்று தொடர்ந்து தன்னுடைய குருக்களைப்பற்றி கூறிக் கொண்டே போனார்.   

No comments:

Post a Comment