Friday, January 13, 2012

மனம்தான் மாயையை உருவாக்குகிறது

                 பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு உரைத்ததிலேயே முக்கியப் பகுதியாக விளங்குவது, தத்தாத்ரேயருக்கும் யது மன்னனுக்கும் இடையே நடந்த உரையாடல் பகுதிதான்.


                    உலகத்தில் எப்படி வாழ்ந்தால் ஜெயிக்க முடியும் என்று கிருஷ்ணர் உபதேசிக்கவில்லை. உலகின் நிலையாமையையும் மாயையையும் குறித்தே பேசினார். இல்லாத ஒரு உலகம் இருப்பதுபோல எப்படித் தெரிகிறது என்று ஆழமாக விளக்கினார். எதனால் இந்த உலகம் தெரிகிறது என்று கேள்விகள் கேட்டுப் புரிய வைத்தார்.
                      இறுதியில் மனம் என்று ஒன்று இருக்கிற வரை உலகம் இருக்கும்; மனம் அழிந்த நிலையில் ஆத்மஜோதி ஒளிரும் என்று முடிவான விஷயத்தை அழுத்தமாகக் கூறினார். ஆனாலும், உத்தவருக்கு அவ்வப்போது சந்தேகம் தோன்றியபடிதான் இருந்தது.

‘‘பகவானே, மனம் எப்படி ஜீவிக்கிறது?’’
‘‘நான் என்ற ஓர் எண்ணத்தை கொண்டுதான் உயிர் வாழ்கிறது. ஓர் உடலை பற்றிக் கொண்டு இந்த உடல்தான் நான் என்று மயக்கம் கொள்கிறது. உடலால் வரும் உணர்வுகளை சேர்த்து வைத்துக் கொண்டு இதைத் தவிர வேறு சுகங்கள் இல்லை; இந்த சுகங்களை அனுபவிப்பதற்குத்தான் வாழ்க்கை; ஆயிரத்தோரு உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் அனுபவிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று சிக்கலான மாயையில் மாட்டிக் கொள்கிறது. மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்கத் துடிக்கிறது. முயற்சியில் தோல்வியுறும்போது தத்தளித்துப்போய் துக்கத்தை அனுபவிக்கிறேனே என்று புலம்புகிறது.’’
‘‘என்னதான் செய்ய வேண்டும்?’’

                 ‘‘வைராக்கியம் வேண்டும். மேலே சொன்ன விஷயங்களை திடச் சித்தமாக புரிந்து கொள்ள சாதுக்களின் சங்கம் வேண்டும். குருவின் கிருபை வேண்டும். வீணாகப் போகிறோமே என்கிற தாபம் வேண்டும். மனம் விஷயங்களை அனுபவிக்கும்போதே இன்பம், துன்பம் என்று மாறி மாறி எடைபோட்டபடி இருக்கும். அந்த இயந்திரத்தனமான விஷயத்தை நிறுத்த வேண்டும். விட்டில் பூச்சியானது விளக்கின் ஒளியைப் பார்த்து மயங்காது, இந்த ஒளியிலிருந்து வரும் சுகம் நிலையானதல்ல, என்னை சிக்க வைக்கும் தந்திரம் என்று பாதைமாறி பறக்க வேண்டும்.

                        இந்த இசை வெறும் இரைச்சல். என் மனதை அலைய வைத்து என்னைப் பிடிக்க வைக்கும் சதி என்று செவி என்கிற புலனோடு சத்தத்தை மான் நிறுத்தியிருக்க வேண்டும். எனக்குள்ளேயே பெரிய ஞானநிதியை, பேரானந்தமான ஆத்மானந்தத்தை வைத்துக் கொண்டு இப்படி சிறுசிறு ஆசைகளுக்கெல்லாம் என் மனம் அலைகிறதே என்று தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும்.

                       உலகம் என்கிற மாயையை வேறு எவரும் உருவாக்கவில்லை; என் மனம்தான் உருவாக்குகிறது. இந்த உலகை வெல்வதைவிட என் மனம் எப்படி உருவாகிறது, மனம் வளர எது எது காரணமாக அமைகிறது என்றுதான் தேடலை துவக்க வேண்டும். அப்படி ஆழமாக நகரும்போது புலன்களினால் ஏற்படும் நுகர்ச்சியே மனதிற்கு உயிர் கொடுக்கிறது என்பது புரியவரும். இசைக்கு வயப்படும் காது, ஒளிக்கு மயங்கும் கண், மணத்திற்கு அடிமையான மூக்கு என்று மனம் கீழ்மையான விஷயங்களில் கிடந்துழல்கிறது. மனமோ, ஆத்மா என்பது எங்கேயோ தொலைதூரத்தில் மறைவாக உள்ள பொக்கிஷம் என்று நினைத்துக் கொள்கிறது.
ஆனால், மனதின் பீடமே ஆத்மாதான் என்பதை குரு அறிவிக்கும்போது ஆன்மிக சாதகன் ஆனந்த அதிர்ச்சியடைகிறான்.

                     வேத வேதாந்தங்களும் இதைத்தான் திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து கேட்கும்போது மனம் தன் மூலத்தை நோக்கி திரும்பும் அதிசயம் நிகழ்கிறது.

அப்படித்தான் யது மன்னனுக்கும் ஏற்பட்டது.” தன்னுடைய குருவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த தத்தாத்ரேயர் சூட்சுமமாக பல விஷயங்களை கூறிக்கொண்டே வந்தார். எந்தெந்த விஷயங்களெல்லாம் மனதை மோகிக்கச் செய்கிறது என்று விளக்கியவர்,

ஸ்பரிசம் என்கிற தொடலால் மனம் எப்படி மயங்குகிறது என்பதற்காக யானையை உதாரணம் காட்டிச் சொன்னார்:‘‘யது மன்னா... கானகத்தின் மையத்தை அடைந்த நான், ஒரு யானை பிளிறும் சப்தத்தை கேட்டேன். சப்தம் வரும் திக்கு நோக்கி ஓடினேன். ஆண் யானை ஒன்று பெண் யானையை துரத்தியது. வேடன் ஒருவன் பெண் யானையை செலுத்தியபடி இருந்தான். மரம், செடி, கொடி என்று எல்லாவற்றையும் பிய்த்துப் போட்டு தலைதெறிக்க ஓடியது. எதிரே இருப்பது என்ன, ஏது என்று தெரியாமல், கவனியாமல் பெண் யானையைத் தொடர்ந்தது. ஓரிடத்தில் வேடர்கள் மறைந்திருந்து இதைக் கவனித்த வண்ணம் இருந்தார்கள். சட்டென்று பெண் யானையை மெதுவாகச் செலுத்தினார்கள். ஆண் யானை அருகே நெருங்கியது. தும்பிக்கையால் பெண் யானையை தொட நெருங்கியபோது பெண் யானையின் வேகத்தை வேடன் அதிகரித்தான். அந்த வேகத்தை எதிர்பார்க்காத ஆண் யானை கால்களை தூக்கி பாய எத்தனித்தது. அதற்கு சற்று முன்னால் இலை, தழை போட்டு மூடி வைத்திருந்த பள்ளத்திற்குள் விழுந்தது. தனியே பள்ளத்தில் தத்தளித்தபடி மேலே ஏறவும் முடியாமல், இடதும் வலதும் நகரவும் இயலாமல் அங்கேயே கிடந்தது.
எத்தனை பலம் வாய்ந்தது யானை! அதை எப்படி ஏமாற்றி விட்டார்கள். அப்படியென்ன பலவீனம் அதற்கு என்று யோசித்தபடி இருந்தேன். யானை ஸ்பரிச சுகத்திற்கு அடிமை. அதன் தோல் பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறதே தவிர மிகமிக உணர்ச்சிமயமானது. அப்படிப்பட்ட யானையானது பெண் யானையின் சிறு தொடலால் வரும் சுகத்திற்காக தன்னையே கூட இழக்கத் தயாராக இருக்கிறது. மெல்லிய தொடலால் ஏற்படும் சுகத்திற்காக காட்டையே கூட நாசமாக்கும். இதுபோலத்தான் மாயை, உலகத்தில் எல்லோரையும் நெருக்குகிறது. சரீரத்தை போஷிக்க வைக்கிறது. ஸ்பரிச சுகத்திற்கு அடிமைப்பட வைக்கிறது. இந்த சுகத்திற்கு அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்று அந்த யானை போதித்தது.
                    பிறகு, அருகேயிருக்கும் தடாகத்திற்குச் சென்றேன். அழகிய மீன்கள் தடாகத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. எனக்கு மட்டும் ஒரு மீன் என்னையே பார்ப்பதுபோல தோன்றியது. அருகே ஒருவன் தூண்டிலைப் போட்டு மீனை பிடித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது மேலும் கீழும் இழுத்துக் கொண்டிருந்தான்.

தூண்டிலில் இருந்த புழுவை பார்த்த மீன் ஆவலாக நீந்தி மேலே வந்தது. இரண்டு முறை தூண்டிலை மேலிழுத்து ஆட்டம் காட்டினான். மீனின் ஏக்கத்தை அதிகப்படுத்தினான். மீன் நீருக்குள் தவிப்பதை உற்றுப் பார்த்தான். மூன்றாவது முறை தூண்டிலை நீருக்குள் செலுத்தினான். இம்முறை தூண்டில் முள்ளின் மீதிருந்த புழுவை மீன் கடிக்க மீனின் வாய்க்குள் முள் சிக்கிக் கொண்டது. சட்டென்று தூண்டிலை மேலே இழுத்துப் போட்டான். மீன் துடிதுடித்து இறந்தது. சே, எப்படி மீன் சுவைக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது. மீனாவது தான் ஜீவிப்பதற்காக இப்படிச் செய்கிறது. மற்ற எந்த இந்திரியங்களைக் கூட எளிதில் ஜெயித்து விடலாம். ஆனால், இந்த நாக்கை மட்டும் எவராலும் ஜெயிக்கமுடிவதில்லை.

                    ஆன்மிகத்தில் முதலில் ஜெயிக்க வேண்டிய விஷயமே இந்த நாக்குதான் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
கானகத்திலிருந்து விதேக தேசத்திற்குள் வந்தேன். அங்கும் எனக்கு ஒரு குரு காத்திருந்தார். அவள் ஒரு தாசி. அவளின் பெயர் பிங்களா
என்பதாகும். அவளிடமிருந்தும் நான் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன்’’ என்று தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறினார்.

No comments:

Post a Comment