Monday, February 6, 2012

அழகன் அனுமன்

                                         
                                ஆஞ்சநேயரை எப்போதும் தியானித்துக் கொண்டு  எந்த காரியத்தில்  இறங்கினாலும் வெற்றி பெறலாம் என்பது அனுபவித்து அறிந்தவர்கள் வாக்கு. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரப் பிரியர். இக்கலியுகத்தில், தன்னை வணங்கும் யாருக்கும் விரைவாக, நிறைவாக அருள்புரியும் அன்புத் தெய்வம். ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், ப்ரம்மசர்யம் என்று எல்லா நிலைகளிலும் தன்னை உயர்த்திக் கொண்ட ராம பக்தன் இவர். ஆஞ்சநேயரை உளமார நினைத்து நெக்குருகி வழிபட்டால் நல்ல புத்தி, உடல் வலிமை, பெரும் புகழ், பயமின்மை, நோய் நிவர்த்தி, திருமண பாக்கியம், நன்மக்கட்பேறு ஆகிய எல்லா நலன்களையும் அருளுவார்.
                                   
              ஆஞ்சநேயரை ராமநாம ஜபம் செய்தே வழிபடலாம்
. வெண்ணைக் காப்பு, வெற்றிலை மாலை, வடை மாலை, செந்தூரக் காப்பு என்று பல வகைகளில் நம் பிரார்த்தனைகளை செலுத்தினால் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார் இந்த சொல்லின் செல்வன்.
                                  
                ராமனுக்காக ராவணனின் படைகளை எதிர்த்துப் போரிட்ட அனுமன் அப்போதும், அதற்கு முன் சீதையைத் தேடிக்கொண்டு இலங்கையில் அலைந்தபோது, அரக்கர்களால் வாலில் தீ வைக்கப்பட்டபோதும் அவர் உடலில்  பல இடங்களில் காயங்களும், புண்களும் ஏற்பட்டன.
               
             தன் வெற்றிக்காக அப்படி ஒரு சேவையைச் செய்த அனுமனை ராமன் அப்படியே அரவணைத்து, ஆரத்தழுவி கண்ணீர்ப் பெருக்குடன் நன்றி சொன்னார். அப்போது தன் உடல் காயங்கள் எல்லாம் பட்டென ஆறிப்போய் புத்துணர்வும் புது பலமும் கொண்டவனாக மாறினார் அனுமன். அப்படிப்பட்ட பாக்கியவானான அனுமனின் உடல் மீது வெண்ணெய்க் காப்பு இட்டு வழிபடுவது, அவர் மேற்கொண்ட காயங்களுக்கு மருந்து போல அமையும்.

              துன்புறுவோரைக் கண்டு உருகி உதவ முன்வரும் ராமனின் மென்மையான மனதை உருவகிக்கும் வகையில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தினால் மீண்டும் ராமன் தன்னை அரவணைத்து ஆறுதல் சொல்வது போலவே உணர்வார்.
வெற்றியைத் தவிர வேறு எதையும் காணாதவர் அனுமன். பால பருவத்தில் சூரியனை ஒரு பழம் என்று நினைத்து தாவிப் பிடிக்கப் போக, இறுதியில் அந்த சூரியனே அவருக்கு குருவாக அமைந்தார்.
                               
                 அதுமுதல் அனுமன் எடுத்த எல்லா முயற்சிகளும் வெற்றிதான். அந்த வெற்றிக்குப் பெருமை சேர்ப்பது அவருடைய அடக்கமான குணம்தான். நல்முயற்சி எதிலாவது ஈடுபடுகிறவர்கள் அந்த முயற்சி வெற்றியடைய ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி பிரார்த்தனை செய்து கொண்டால் வெற்றி பெறலாம் என்பதும் பலருடைய அனுபவம்.
                       
              அவருக்கு வடை மாலை சாத்துவதும் அவருடைய பராக்கிரமத்தை உணர்ந்து அனுபவிப்பதுபோல என்பார்கள். அதாவது, அவருக்கு சாத்தப்படும் வடை மாலை வடைகள் உளுந்து பருப்பால் தயாரிக்கப்படுவது. உளுந்து கொழுப்புச் சத்து மிகுந்தது. அத்தகைய கொழுப்பு மிகுந்த அரக்கர்களை அவர் தட்டித் தட்டிப் பந்தாடி தோல்வி காண வைத்ததுபோல, நாமும் உளுந்து மாவைத் தட்டித் தட்டி பொரித்து, மாலையாகக் கோத்து அவருக்கு அணிவித்து வழிபடுவார்கள். இதனால் நியாயமான விஷயங்களுக்காக நாம் மிகுந்த மன, உடல் பலத்துடன் போராட முடியும் என்பார்கள்.


          அனுமார் வாலில் அடுத்தடுத்துப் பொட்டுகள் வைத்து வழிபடுவது இன்னொரு முறை. இதற்கு ஒரு புராண சம்பவத்தைக் காரணமாகச் சொல்வார்கள். அதாவது, ராமனுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட சிவபெருமான் ஆஞ்சநேயர் உருவம் எடுத்தாராம். அப்போது பார்வதி தேவி, தானும் அந்தச் சேவையில் பங்குபெற விரும்பினாளாம். உடனே அனுமாராக மாறியிருந்த சிவன் தன் வாலுக்குள் தேவியைப் புகுந்து கொள்ளச் சொன்னாராம். இதனாலேயே அனுமனின் வால் சக்தி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி உள்ளதாக ஓர் ஐதீகமும் உண்டு. அதனால், மனதிலும் உடலிலும் ஆக்கபூர்வமான சக்தியைக் கொள்வதற்கும், நவகிரக தோஷங்கள் விலகுவதற்கும் இவ்வாறு அனுமன் வாலில் பொட்டு இட்டு வழிபடுகிறார்கள்.
                        
             வட மாநிலங்களில் செந்தூரம் என்ற குங்கும வகையை கோயில் பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த செந்தூரத்தால் ஆஞ்ச நேயருக்குக் காப்பு செய்து வணங்குவது இன்னொரு வழிபாட்டு முறை. இதற்கும் ஒரு புராண காரணம் உண்டு. ராவண வதத்திற்குப் பிறகு சீதையின் நெற்றியில் சிவப்பாக ஒரு காயம் இருப்பதைப் பார்த்தார் ஆஞ்சநேயர். உடனே பதறிப்போய், ‘‘என்ன காயம் அது, அம்மா?’’ என்று பதறினார். அவருடைய பதற்றத்தையும், பாசத்தையும் கண்டு பெருமை பட்டுக் கொண்ட சீதை, ‘‘அது பத்தினிகள் மேற்கொள்ளும் ஒரு சம்பிரதாயம். கணவன் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தினமும் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வது எங்கள் வழக்கம்’’ என்றாள். மறுநாள் அனுமனைப் பார்த்த அனைவரும் திகைத்துப் போனார்கள். ஆமாம், தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வந்து நின்றிருந்தார் அவர்‘‘ராமபிரானின் உடல் நலத்துக்காக ஒரு சிறு செந்தூரப் பொட்டை  அன்னை வைத்துக் கொண்டார். நான் ஐயனின் நிரந்தர, முழுமையான ஆரோக்கியத்துக்காக உடல் முழுவதும் பூசிக்கொண்டி ருக்கிறேன்’’ என்று விளக்கம் சொன்னார்! தம் பரிபூரண உடல் ஆரோக்கியத்துக்காக அனுமனுக்கு செந்தூர அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள், பக்தர்கள்.
                         
               ஆஞ்சநேயர் பல திருக்கோயில்களில் பலவிதமாக காட்சியளிக்கிறார். பக்த ஆஞ்ச நேயர், வீர ஆஞ்சநேயர், சஞ்சீவி ஆஞ்சநேயர், விநய ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், கல்யாண ஆஞ்சநேயர், அனுமன்- கருடன் - வராகம் - நரசிம்மன் - ஹயக்ரீவ உருவங்கள் இணைந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பல ரூபங்களில் அருள்பாலிக்கிறார்.
                   

                     பராக்கிரமம் மிகுந்த ஆஞ்சநேயரைப் பல தோரணைகளில் அலங்காரம் செய்து வழிபடுவது பொதுவான பக்தி முறை. அத்தகைய அழகு சுந்தரனை, சுந்தரகாண்ட நாயகனை, இங்கே நாம் தரிசிப்போம்.

No comments:

Post a Comment