Thursday, April 5, 2012

பங்குனி உத்திர நன்னாளான இன்று முருகப்பெருமானை வழிபடும் பிரார்த்தனை!

                             பாரப்பா! பழனியப்பா: பங்குனி உத்திர நன்னாளான இன்று, பழநி முருகப்பெருமானை பக்தியுடன் வழிபடும் விதத்தில் இப்பிரார்த்தனை இடம் பெற்றுள்ளது.
* பாலதண்டாயுதபாணியே! கைலாய மலையில் இருந்து பழநி மலைக்கு வந்தமர்ந்த பாலனே! சித்தர் கூட்டத்தாரின் தலைமைச் சித்தனே! அகத்தியருக்கு உபதேசித்த ஆண்டவனே! அவ்வைக்கு அருள் செய்த அண்ணலே! ஆறுமுகப்பெருமானே! வெற்றிவேலாயுத மூர்த்தியே! எங்களுக்குச் செல்வச்செழிப்பையும், மனநிறை வையும் தந்தருள்வாயாக.
* மயில் வாகனனே! வேத மந்திரப்பொருளாய் இருப்பவனே! மனதைக் கவரும் பேரழகு கொண்டவனே! தேவாதிதேவனே! பிறவிக்கடலைக் கடக்கத் துணை செய்யும் தோணியே! ஐங்கரத்தானின் தம்பியே! பழநி மலையேறி வரும் அடியார்களின் வாழ்வில் ஏற்றத்தை தருபவனே! பார்வதிதேவி ஈன்ற பாலகனே! எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்வாயாக.
* ஆயிரம் கோடி மன்மதர்களுக்கு ஈடான பேரழகனே! சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்தவனே!சிவனுக்கு பிரணவப்பொருளை உபதேசித்த குருநாதனே! பிரம்மனின் அகந்தையைப் போக்கியவனே! சரணடைந்தவர்களைக் காப்பவனே! தாமரை மலர் போன்ற செக்கச் சிவந்தவனே! மால் மருகனே! உன் பன்னிருகரங்களால் எமக்கு வேண்டியவற்றை வாரி வழங்குவாயாக.
* சரவணப்பொய்கையில் உதித்தவனே! கங்கையில் பிறந்த காங்கேயனே! கார்த்திகை பெண்டிர் வளர்த்தெடுத்த செல்வமே! வள்ளிக்கு வாய்த்தவனே! சேவற்கொடி ஏந்தியவனே! பகைவன் சூரபத்மன் மீதும் இரக்கம் காட்டிய கருணாமூர்த்தியே! தாமரை போன்ற குளிர்ந்த கடைக்கண் காட்டி எங்கள் வாழ்வை மேன்மை பெறச் செய்வாயாக.
* குமரமூர்த்தியே! குகப்பெருமானே! தாரகாசுரனை அழித்தவனே! தேவசேனாபதியே! சஷ்டிநாதனே! சங்கரன் மகனே! குன்றுதோறும் அமர்ந்தவனே! சரவணனே! சண்முகனே! ஆவினன்குடியில் அருள்புரியும் குழந்தை வேலாயுதனே! பன்னிருகைப் பரமனே! முக்திக்கு வித்தானவனே! ஞானச்சுடரொளியே! உமது அருளால் நாங்கள் உடல்நலனுடன் வாழ வழி காட்டுவாயாக!
* கடம்பனே! கார்த்திகேயனே! பங்குனி உத்திர நாயகனே! சூரசம்ஹாரனே! இடும்பனுக்கு அருளிய இனியவனே! சரவணபவனே! வேல்முருகனே! செங்கல்வராயனே! சண்முகத்தரசே! "ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளே! மனம், மொழி, மெய் மூன்றாலும் உன் திருவடிகளைச் சிந்திக்கும் பாக்கியத்தை தருவாயாக.
* தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடி வரும் அன்பர்க்கு எல்லா வளங்களையும் வாரி வழங்குவதற்காக ஆண்டிக் கோலத்தில் வீற்றிருக்கும் தயாபரனே! தாயினும் சாலப்பரிந்து அருள்பவனே! எங்களிடமும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்க அருள்புரிவாயாக

No comments:

Post a Comment