Tuesday, April 24, 2012

இன்று அட்சயதிரிதியை: எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

                               வாழ்வின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் உன்னதமான நாள் அட்சயதிரிதியை. அக்ஷய என்றால் வளர்வது என பொருள். இந்நாளில் தான் கிருஷ்ணரின் அருளால் குலேசர் வீட்டில் செல்வம் செழித்தது.  கோவிந்தநாமம் ஜெபித்த திரவுபதியின் ஆடை இடைவிடாமல் வளர்ந்தது. முதலாவது யுகமான கிருதயுகத்தின் தொடக்கநாள் அட்சயதிரிதியை அன்று அமைந்தது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் இந்நாளில் அவதரித்தார். கிருஷ்ணரின் சகோதரர் பலராமர் இந்நாளில் பிறந்ததாக சொல்வதுண்டு, லட்சுமியைக் கிருஷ்ணர் திருமணம் செய்ததும் இந்நாளில் தான்.
வளர்ச்சிக்கான இந்நாளில் செய்யும் வழிபாட்டிற்கு பலன் அதிகம். இந்த நாளின் பெருமையை உத்தரகால மிருதம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமியின் அம்சமான பொன்பொருள், ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் வாங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. செல்வத்தின் அதிபதி குபேர லட்சுமி. அட்சயதிரிதியை நாளில் இவளை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்நாளில், வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். இன்று காலை அல்லது மாலையில் குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்த நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். ஓம் குபேராய நமஹ ஓம் மஹாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபிக்க வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.
வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமிகரம் என்பர். இன்று மாலை வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட்டால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று குறிப்பிடுவர். இவற்றைத் தானமாக அளித்தால் திருமகள் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை ஆலய வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும். தயிர்ச்சாதமும் வழங்கலாம். இவற்றைத் தானம் செய்வதால், லட்சுமியின் அருளால் செல்வந்தர்களாக வாழும் பாக்கியம் உண்டாகும்.

No comments:

Post a Comment