Thursday, May 31, 2012

அதிதி

                       
                       ரிக் வேதத்தில் பராசக்திக்கு சமமான ஒரு பெண் தெய்வம் உண்டென்றால் அவள் தான் அதிதி. புராண காலத்தில் இவள் தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்து காசியபரை மணக்கிறாள். பன்னிரு சூரியர்களைப் பெற்றெடுக்கிறாள். இந்திரனையும் ஈன்றெடுக்கிறாள்.
                          

            இதையெல்லாம் விட மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுக்கும் போது, அவனை தன் பிள்ளையாக கர்ப்பத்தில் தாங்கி, பெற்றெடுத்த பெருமையும் இவளுக்கு உண்டு. சூரியமண்டல ஜோதியை ஸவிதா என்று காயத்ரி மந்திரத்தில் போற்றுகிறார்கள்.
                                  
          இந்த ஸவிதா மூலம் நாங்கள் இன்பங்களை எய்துமாறு செய் என்று அதிதியை வேதம் வேண்டுகிறது. ஆக, சூரிய ஜோதியையும் தூண்டிவிடும் பிரம்ம ஞானஜோதி இவளே என்று உணரலாம். இவள் மனநலன், உடல் நலன், பொருள் நலனை தருபவள். அதிதியே! அன்போடு காப்பவளே, நல் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அருள் செய்பவளே! பிரபஞ்ச உயிராக இருப்பவளே! உன்னைத் துணைக்கு அழைக்கிறோம் என்கிறது யஜுர் வேதம். அதிதிக்குறிய உருவ வர்ணனை என்று எதுவும் சொல்லப்படவில்லை.
                                     
             புராணக் கதை ஒன்றில் நரபலிக்காக கட்டுண்ட ஒரு பாலகன், அதிதியை நோக்கியே உன்னையன்றி யார் என்னை மீண்டும் பெற்றோர் முகம் பார்க்குமாறு செய்ய முடியும்? என்று கேட்பது மனதை நெகிழச் செய்கிறது. இவள் சிறு குழந்தைகளை விசேஷமாக ஆசிர்வதிக்கிறாள். கால்நடைகளுக்கு சிறப்பாக அருள்புரிகிறாள். இவளை வருணனின் மாதா என்று குறிப்பாகச் சொன்னாலும், துவாதச ஆதித்யர் என்ற பன்னிரு சூரியர்களையும் பெற்றெடுத்தவள் இவள் என்பதாலேயே இவளுக்கு அதீத மகிமை. அதிதியின் பிள்ளை என்பதால் தான் சூரியனுக்கு ஆதித்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

No comments:

Post a Comment