Friday, August 17, 2012

இவரைப் பற்றி பேசினாலே நல்லநேரம் வந்துடும்!

                         
               எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக ஆஞ்சநேயர் விளங்கினார். அவரைப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டதாக அர்த்தம். முதன்முதலில் சுக்ரீவனுக்கு ராமனின் வரவைத் தெரிவித்ததன் மூலம், சுக்ரீவனின் மனைவி அவனுடன் சேரக் காரணமானார். அசோகவனத்தில் சிறை இருந்த சீதைக்கு கணையாழியைக் கொடுத்து ஆறுதல் அளித்ததன் மூலம், ராமனுடன் அவள் சேரக் காரணமானார். கிஷ்கிந்தையில் இருந்த ராமருக்கு சீதையின் சூளாமணியை அளித்து நற்செய்தி சொன்னதன் மூலம், அவரது உயிர் பிரியாமல் பாதுகாத்தார். அவர் வாயுவின் பிள்ளை என்பதால், பலரது மூச்சுக்காற்று தொடரச் செய்வதில் சிரமமா என்ன! இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மயங்கிக் கிடந்தபோது, தக்கசமயத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து உயிர் கொடுத்தார். ராவண சம்ஹாரம் முடிந்தபின் ஸ்ரீராமஜெயம் என்னும் வெற்றிச் செய்தியை சீதைக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்தார். ராமனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்ட குகனிடம், ராமனின் வருகையை எடுத்துரைத்தார். அயோத்தின் எல்லையில் நந்திக்கிராமத்தில் இருந்த பரதனிடம் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்புவதை எடுத்துரைத்தார். இப்படி ராமாயணத்தில் ஆஞ்சநேயர் செல்லும் இடமெல்லாம் நல்லசெய்தியை வழங்குவதைக் காணலாம்.

ஆடம்பரபக்தி, எளியபக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்?
                        
                  விருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ,எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. பொருளாதாரம் இடமளித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள்.  இல்லாவிட்டால் எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

போற்றலும் தூற்றலும் அவருக்கே!

                        பக்தனின் அடையாளம் என்ன என்பதை பக்தியில் சிறந்த  பிரகலாதன் விஷ்ணு புராணத்தில் கூறுகிறான். எக்காரணம் கொண்டும் யார் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது. மற்றவர்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. விவேகம் இல்லாதவர்களிடம் தான் இதுபோன்ற இழிகுணங்கள் இருக்கும், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக (மறைபொருள்) விஷ்ணு இருக்கிறார். அவரே உனக்குள்ளும், எனக்குள்ளும் உறைந்திருக்கிறார். யார் மீது அன்பு காட்டினாலும், அது அந்த பரம்பொருளையே சேரும். யாரை வெறுத்தாலும், நிந்தனையாகப் பழித்தாலும் அதுவும் அவரையே சேரும்.


இரண்டு வகை யோகம்!

யோகம் என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். பங்களா, கார் என்று ஆடம்பரத்துடன் வாழ்பவனை அவனுக்கென்ன யோகக்காரன் என்று அனைவரும் சொல்வதுண்டு. ஆனால், ஆன்மிகத்தில் யோகம் என்பது இறைவனை அடைவதைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் இணைப்பது என்று பொருள். மனதை அலைபாய விடாமல் இறைவனை அதற்குள் நிலைநிறுத்துவதே ஆன்மிக யோகம். இறைவனை அடைய பக்தியோகம், கர்மயோகம் என சில வழிகள் உள்ளன. இவை பின்பற்றுவதற்கு கடினமானவை. மிக எளிமையான யோகம் ஒன்று உண்டு. அதுவே பிரபத்தியோகம். இதற்கு இறைவனின் திருவடிகளை முழுமையாகச் சரணடைதல் எனப்பொருள். பன்னிரு ஆழ்வார்களும் திருமாலை இந்த யோகத்தின் மூலமே அடைந்தனர். நரசிம்ம பக்தர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று சொல்லி அவரைச் சரணடைகிறார்கள்













துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன?

துளசி மகாவிஷ்ணுவின் வாசஸ்தலம். துளசி இதழ்கள் மகாலட்சுமி வடிவமானவை. லட்சுமி நாராயண ஸ்வரூபமானது துளசிச்செடி. இதை வீட்டில் வைப்பதால் வறுமை, நோய், கண்திருஷ்டி, தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். மூன்று முறை வலம் வர வேண்டும்

No comments:

Post a Comment