தூய்மையான பக்தியின் வடிவம், எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராத உத்தமமான தொண்டின் வடிவம்; இசை நுணுக்கத்தின் எல்லை கண்டவர்; எவ்வளவுதான் தகுதி, திறமை என்று புகழ் மாலைகள் சூட்டினாலும் அவற்றை எல்லாம் தாண்டி நிற்கும் அடக்கத்தின் வடிவம் - ஆஞ்சநேயர். இவர் அவதரித்தது மார்கழி மாத மூலநட்சத்திரத்தன்று. (சுவாதி நட்சத்திரம் என்றும் சிலர் சொல்வர்). சிவ அம்சமே ஆஞ்சநேயராக அவதரித்தது. பரவாசுதேவனின் அவதாரமான ராமருக்குப் பணிவிடை செய்தது என்று தியாகராஜ ஸ்வாமிகள் எடுத்துரைக்கிறார்: ‘அந்தகாரி நீ செந்த ஜேரி அனுமந்துடை கொலுவலேதா’ (எந்தராதி - எனும் பாடலில்) ‘‘கால காலனான சிவபெருமான், உன்னருகில் அனுமனாக வந்து, பணிவிடை செய்யவில்லையா?’’ என்பது கருத்து. அருணகிரிநாதரும் இதே கருத்தை, ருத்ரர் சிறந்த அனுமன் என்கிறார். (கருவடைந்து-திருப்புகழ்) இவ்வாறு அவதரித்த ஆஞ்சநேயர் சூரிய பகவானிடம் அனைத்து வேத சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தார். அதற்காக ஆஞ்சநேயர், குருதட்சிணை கொடுக்க விரும்பியபோது, சூரிய பகவான், ‘‘மாருதியே! என் மைந்தனான சுக்ரீவனுக்கு நீ மந்திரியாக இருந்து நல்வழிகாட்டு!’’ என்றார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுக்கு மந்திரியாக நல்வழி காட்டினார். மனைவி, அரச போக வாழ்க்கை என அனைத்தையும் இழந்து, காட்டில் மலைக்குகையில் வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவன், ஆஞ்சநேயர் மூலமாக ராமரின் நட்பைப் பெற்று, மனைவியுடன் அரச வாழ்வையும் திரும்ப அடைந்தான். பரிதி மகன் வாசல் மந்திரி அனுமன் என அனுமனைப் புகழ்கிறார், அருணகிரிநாதர். ஆஞ்சநேயரின் ஆற்றலை ஆதிகவியான வால்மீகி தொடங்கி, அண்மைக்காலக் கவிஞர்கள் வரை பலர் பாடியிருக்கிறார்கள். ராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்னும் பகுதி முழுவதும் ஆஞ்சநேயரின் ஆற்றலையும் பண்புகளையும் விளக்குகிறது. ஆஞ்சநேயரின் புகழ்பாடும் அந்த சுந்தர காண்டம் ஒரு சர்வ ரோக நிவாரணி. சுந்தர காண்டப் பாராயணம், எல்லாத் துயரங்களையும் நீக்கி மங்கலங்களை அருளும். சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஆஞ்சநேயரைத் துதிக்கும் கம்ப ராமாயணப் பாடலை மட்டுமே பாடினால் போதும். அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான். அற்புதமான பாடல் இது. பஞ்ச பூதங்களைக் குறிக்கும் முகமாக ‘அஞ்சிலே’ என்ற சொல்லை, ஐந்து முறை சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல; பஞ்ச பூதங்களையும் ஆஞ்சநேயரோடு தொடர்புபடுத்தி இருப்பதையும் உணர வேண்டும். இப்பாடலின் கருத்து;வாயு பகவானின் மகனான ஆஞ்சநேயன், கடலினை (நீரை)த்தாண்டி, ஆகாயத்தின் வழியாக ராமருக்காக இலங்கைக்குத் தூது சென்று, பூமா தேவியின் மகளான சீதாதேவியைக் கண்டு, ராவணன் நகரான லங்கா நகரத்தில் தீயை வைத்தார். அவர் நம்மைக் காப்பார்.
No comments:
Post a Comment