Sunday, July 24, 2011

ஆடி மாதப் பிறப்பு ஸபெஷல்

                         ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா! நமக்கு ஒரு ஊரும், பேரும் மட்டுமே இருக்கும். ஆனால், உலகாளும் நாயகிக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு திருநாமம். அவள் உலகையே ஆள்பவள் என்பதால்



ஆயிரம் திருநாமங்களைப் பெற்றாள். "தேவி பாகவதம்' என்னும் நூல் அம்பிகையைப் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. துஷ்டர்களைஅழிப்பதற் கென்றே ஆயிரம் கைகள். அதில் ஆயிரம் ஆயுதங்கள் ஏந்தி நிற்கிறாள். இவள் எங்கும் நிறைந்தவள். அவள் பார்வைக்குள்ளே உலகம் அடங்கி இருக்கிறது. அவள் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதனால் "ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்' என்று தேவியைக் குறிப்பிடுகிறார்கள். துர்க்கை என்பதன் பொருள் அம்பிகையின் திருப்பெயர்கள் லலிதா சகஸ்ரநாமத்தில் விரிவாகச்
சொல்லப்பட்டுள்ளது. "துர்க்கம்' என்றால் "வழி'. அவள் பக்தர்களை துயரங்களில் இருந்து மீட்டு நல்வழி காட்டுபவள். ஒரு கோட்டையைச் சுற்றி இருக்கும்
அகழியானது, எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் எப்படிப் பாதுகாக்கிறதோ, அதைப்போல தன் அன்பர்களைப் பாதுகாத்து தீவினைகளை நெருங்க விடாமல் அரண்(கோட்டைச்சுவர்) போல பாதுகாப்பதாலும் அவளுக்கு "துர்கா' என்று பெயர். சிவபெருமான் துஷ்டர்களை வதம் செய்த தருணத்தில்,

அவருடைய கையில் சூலமாக நின்று சூலபாணியாக விளங்கியதால் தேவிக்கு சூலினி என்று பெயர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்தபோது சக்திவடிவே வேலாக நின்று உதவி செய்தது. இதனால் அவள் "சக்தி' என பெயர் பெற்றாள். தேவியைப் பார்த்த அளவிலேயே பக்தன் தாயைக் கண்ட மழலைபோல பரவசப் பட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று தான் அம்பிகை அபயகரத்துடன் நமக்கு காட்சி தருகிறாள்.
சூலம் வைத்திருப்பது ஏன்

சூலம் தேவிக்குரிய ஆயுதம். அது மூன்று இலைகளைக் (பிரிவு) கொண்டது. இச்சூல வடிவத்தை பல்வேறு நிலைகளோடு ஒப்பிடுவர். மனிதனின் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மனிதனுக்குள்ள மூன்று நிலைகளாகவும் சொல்வர். மனம்,வாக்கு, காயம்(உடல்) என்றும் சொல்லலாம். இம்மூன்றாலும் ஒரு மனிதன் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, காயம்

(உடம்பு) ஒரு செயலில் ஈடுபடக்கூடாது என்பதையே சூலத்தின் வடிவம் காட்டுகிறது. வாழ்வில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் முறையாகக் கடைபிடிப்பவர்கள் தேவியின் அருள் பெற்று மகிழ்வார்கள். "இச்சை (நியாயமான ஆசை), கிரியை (அதை செயல் படுத்தும் தன்மை), ஞானம்' (அதனால் ஏற்படும் பலன்) என்றும் சொல்லலாம். இந்த மூன்று சக்திகளும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதையும் சூலம் காட்டுகிறது. சூலத்தை வெறும் கொல்லும் ஆயுதமாகப் பார்க்கக்கூடாது. தத்துவார்த்தமாக தரிசிக்க வேண்டும். எனவே தான் அம்பிகையை "திரி வர்க்க தாத்ரீ' (படைத்தல், காத்தல், அழித்தலாகிய தொழிலுக்கு அதிபதி) என்று போற்றுகிறோம்.

No comments:

Post a Comment