பசியில்லே! தூக்கமில்லே
மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டம் அல்லது பரமபதத்தில், அவரோடு கலந்த ஜீவன் முக்தர்களை நித்யசூரிகள் என்பர். இவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிப்பதோடு, அவரின் தெய்வீகப் பெருமைகளையும் பாடிக் கொண்டிருப்பர். பசி, தூக்கம், சுகம், துக்கம் போன்ற எவ்விதமான உணர்வுகளும் இவர்களிடம் இருக்காது. இங்கு செல்வோரை கடல் அலைகள் கையெடுத்து வணங்கும். மேகங்கள் முழங்கி வாழ்த்து சொல்லும். தேவர்கள் வரவேற்று மகிழ்வர் என்று நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளார். வைகுண்டத்திற்கு தெளிவிசும்பு திருநாடு என்ற பெயர் உண்டு. இதற்கு பிரபஞ்ச படைப்பைப் பற்றிய தெளிவைத் தரும் இடம் என்று பொருள். நம்மாழ்வார் பத்து பாசுரங்களில் இதனைப் பாடியுள்ளார்.
தசாவதாரம் நீங்கலாக, பெருமாள் எடுத்த சில அவதாரங்களில் ஒன்று வியாச அவதாரம். வியாசம் என்றால் பகுத்தல். கட்டுரை எழுதும் மாணவர்கள் பகுதிபகுதியாக உபதலைப்பிட்டு எழுதுவர். அதனால் கட்டுரை நோட்டை வியாசநோட்டு என்று சொல்லும் வழக்கம் இருந்தது. வேதங்களைப் பகுத்து எழுதியதால், இவர் வியாசர் எனப்பட்டார். இவரது உண்மைப்பெயர் கிருஷ்ணதுவைபாயநர். தந்தை பராசர முனிவர், தாய் சத்யவதி. இவருக்கு பைலர், வைசம்பநாயர், ஜைமிதி, சுமந்து என்ற நான்கு சீடர்கள் இருந்தனர். இவர்கள் மூலம் வேதத்தை இவர் உலகில் பரப்பினார். பிரம்மமாகிய இறைவனை உணர்த்தும் பிரம்ம சூத்திரத்தை டங்கர், த்ரமிடர், போதாயநர் ஆகியோர் மூலம் பரப்பினார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றை எழுதி பாமர மக்களும் தர்மத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். சாந்த சொரூபனாகத் திகழ்ந்ததால் இவருக்கு கோபம் வந்ததில்லை.
No comments:
Post a Comment