இறைவனை வெளியில் தேடுவது அறியாமை, தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்வது அறிவு. இங்கு இறைவனை உணர்ந்தவனே அங்கு சேர்ந்து வாழ்வான்.
* தன்னை மனிதனென்று நினைத்தால் மனிதனாகவும், இறைவனாக நினைத்தால் இறைவனாகவும் ஆக முடியும். ஒருவன் தான் எவ்வாறு நினைக்கிறானோ அவ்வாறே ஆகிறான்.
* கைகளினால் தாளம் போட்டுக் கொண்டு இனிமையான "ஹரிநாம சங்கீர்த்தனம்' செய்தால் மனத்திலுள்ள தீய சிந்தனைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
* பூமியில் நான்கு திசைகளிலும் பயணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. ஏனெனில் அந்த தர்மம் உன் உள்ளத்துக்குள் தான் ஒளிந்திருக்கிறது.
* தெய்வீகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள், பார்வைக்குக் சாதாரண மனிதர்களிடம் இருந்து வருவது போலத் தோன்றினாலும், உண்மையில் ஈஸ்வரன் சந்நிதியிலிருந்தே வருகின்றன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
* செயல்கள் கைகூட வேண்டுமானால் ஈஸ்வரனிடமிருந்து தெய்வ சக்தியையும், அதிகாரத்தையும் முதலில் பெற வேண்டும். இந்தச் சக்தியை பெறாத வரையில் வாழ்நாள் முழுவதும் தர்மப் பிரசாரம் பண்ணினாலும் அவை வீணாய் முடியும்.
* பகவான் சந்நிதியில் விவாதம், புத்தி, படிப்பு இவற்றால் பிரயோஜனமில்லை, மாறாக அங்கே வாயற்றவன் பேசுவான், பார்வையற்ற வன் காண்பான், காதற்றவன் கேட்பான்.
* சாஸ்திரங்களைப் படிப்பதை விட கேட்பது நல்லது.
* தீவிர வைராக்கியத்தால் ஒருவன் ஈஸ்வரனை அடைந்துவிட்டால் அவனிடம் உள்ள பெண்ணாசை தானே நசிந்து போகும். அப்போது அவனுடைய மனைவியிடமிருந்து கூட ஆபத்து உண்டாவதில்லை. பெண்ணாசையை ஒழித்தவன் உலகத்தையே துறந்தவனாகிறான். அவனுக்கு வெகு அருகில் இறைவன் இருக்கிறார்.
* ஆழமான கடலில் முத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளை எடுக்க ஒருவன் அனைத்து வித ஆபத்துக்களுக்கும் துணிய வேண்டும். கடலில் ஒரு தரம் மூழ்கி உனக்கு முத்துக்கள் அகப்படவில்லையென்றால் கடலில் முத்துக்களே இல்லை என்று தீர்மானிக்கக் கூடாது. இறைவனைத் தேடுதலும் இதுபோன்றுதான்.
* நீண்ட கால பழக்கத்தால் மனத்தை அடக்கிய பின்னர் தான், தனிமையான இடத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் கடவுளைத் தியானிக்க முடியும்.
* தவளைக் குஞ்சின் வால் அறுந்து விழும் வரை அது நீரில் மட்டும் வசிக்கும். வால் விழுந்த பிறகு அது நீரிலும், நிலத்திலும் வசிக்க முடியும். அதுபோல இறை தியானத்தில் "அறியாமை' என்னும் வால் அறுந்து விழுந்து விட்டால், அவன் தன்னிச்சைப்படி சச்சிதானந்தக் கடலிலும் மூழ்கலாம், உலகத்திலும் வாழலாம்.
* சாதுக்களுடன் நட்பு, விவேகம், உண்மையான குருவின் ஆசி இருந்தால் கடவுளை எளிதாக அடையமுடியும்.
* பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேர்வதைப் போல, கடவுளை அடைய பல பாதைகள் உள்ளன. ஒவ்வொரு பாதையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே ஆகும்.
No comments:
Post a Comment