Thursday, March 1, 2012

நாராயணா என்னும் நாமம்

நாவால் சொன்னால் வரும் சேஷமம்                                  
*பரமனின் திருவடிகளில் தன்னை உண்மையாகச் சமர்ப்பித்த ஒருவன் தன் வருங்கால வாழ்வு பற்றி கவலை கொள்வது கூடாது. ஏனென்றால், அது பரமனின் கையில் உள்ளது. எனவே, இதைப் பற்றி துளியளவு கவலைப்பட்டாலும் அவனிடம் சரணாகதி அடைந்ததில் அர்த்தமில்லை. ஒருவனுடைய நிகழ்கால வாழ்க்கை அவனுடைய முந்தைய செயல்பாடுகளின் படியே ஏற்படுகிறது. அதனால் அதைப்பற்றியும் சிந்திக்கவேண்டியதில்லை. நீங்கள் ஆற்றும் கடமைகள் உலகப் பயன்களைப் பெறுவதற்காக என்று கருதாமல், அவற்றை பரமனுக்குச் செய்யும் சேவையாக எண்ணிச் செயல்படுங்கள்.
* நம்மாழ்வாரும், மற்ற ஆழ்வார் களும் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தங்களை நன்கு கற்று, அவற்றை நல்லவர்களுக்குக் கற்பியுங்கள். இது முடியாதென்றால், ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான்களுக்கு தொண்டு செய்து வாழுங்கள். இதுவும் முடியாதென்றால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு உங்கள் முழுப்பளுவையும் பரமனிடம் ஒப்படைத்துவிட்டு எட்டெழுத்து மந்திரத்தை (ஓம் நாராயணாய நம:)
ஜெபித்து வாருங்கள். இவற்றில் எதுவும் முடியாவிட்டால், ஞானமும் பக்தியும் கொண்டு பற்றில்லாமல் வாழும் பக்தனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்கு சேவை செய்து வாழுங்கள். உங்கள் அகங்காரத்தை அறவே விடுத்து அவன் சொற்படி நடந்து கொள்வது முக்திக்கு (பிறப்பற்ற நிலைக்கு) வழி.
* சுவையான தளிர் வெற்றிலையையம், நறுமணம் கொண்ட மலர்களையும், குளிர்ந்த சந்தனத்தையும் பெற்றாற்போல நண்பர்களைக் கண்டு வரவேற்று மகிழுங்கள். உங்கள் எதிரிகளைக் கண்டால் பாம்பையும்,  புலியையும், நெருப்பையும் எதிர்கண்டது போல ஒதுங்குங்கள். உலகியல் நாட்டம் கொண்டு அலைபவர்களைக் கண்டால் கல்லையும், புல்லையும் கண்டால் போல அசட்டையாக இருங்கள்.
* பக்தர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டு பழகுவதால் உங்களுக்கு ஆன்மஒளி உண்டாகும். இதுவே பரமனிடம் சரணடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய முறையாகும். நீங்கள் வேண்டும் எதையும் தாராளமாக அளிக்க கருணைக்கடலான பரமன் எப்போதும் சித்தமாக இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரிடமும் எதையும் யாசிக்கவேண்டிய தேவையில்லை. உங்களுக்கு வேண்டியதை அவனே அருள் செய்வான்.
* முக்திக்கு (பிறப்பற்ற நிலைக்கு) வேறு வழிகளும் உண்டு என்று திசைதிருப்ப முயல்பவர்களின் கூட்டுறவை தவிருங்கள். அற்பலாபங்களுக்கும் சுகபோகத்துக்கும் எப்போதும் அலைபவர்களுடன் சேரவேண்டாம். உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள விரும்பாதீர்கள். யாரிடமும் அவமதிப்பாக நடந்து கொள்ளாதீர்கள்.
கடவுளுடைய உண்மையான பக்தர்களுக்கு அன்புடன் பணிவிடை செய்து வாழுங்கள். கடவுளுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது மிகவும் புனிதமானதாகும். இதனால் நம் பாவங்கள் மறைந்து புண்ணியம் உண்டாகும். கடவுளின் பிரசாதத்தை புனிதமானதல்ல என்ற ஒருபோதும் சொல்வது கூடாது. நற்குணம் கொண்ட பெரியவர்கள், அறிவில் சிறந்தவர்கள், புனிதமானவர்களைக் கண்டால் தலைவணங்கி நில்லுங்கள்.

                                   

No comments:

Post a Comment