Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Friday, May 4, 2012
தெட்சிணாமூர்த்தியை குருவாக வழிபடுவது ஏன்?
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.
தட்சிணாமூர்த்தி
சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று.
தெட்சிணம் என்றால் என்ன?
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.
குரு - தெட்சிணாமூர்த்தி வித்தியாசம்
நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தெட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தெட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தெட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு, குருவின் திசை நவக்கிரக சன்னதியில் வடக்கு. தேவர்களின் குருவே பிரகஸ்பதி. இவரே நவக்கிரக அந்தஸ்தைப் பெற்றவர். தெட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். இவர் அம்பிகைக்கும், சனக, சனாதனர் உள்ளிட்ட நால்வருக்கும் வேதம் கற்பித்தவர். ஆனால், இருவருக்கும் மஞ்சள் ஆடை அணிவதில் ஒற்றுமை இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment