Without devotion, knowledge is tasteless. Without knowledge, devotion is mere empty idol worship- SWAMI CHINMAYANANDA
Saturday, May 5, 2012
தட்சிணாமூர்த்தி மவுனமானது ஏன்?
பிரம்ம புத்திரர்கள் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் நான்குவேதம், ஆறுசாஸ்திரம், 64 கலைகள், 96 தத்துவங்கள், ஆகமங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இவ்வளவு கற்றிருந்தும் அவர்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. கயிலைக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி இன்னும் என்ன வேண்டும் எனக்கேட்டார். மனம் அமைதி பெற அருள் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர். அவர்களது வேண்டுகோளின்படி சிவபெருமான் அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார். சனகாதி நால்வரும் மகிழ்ச்சியுற்று ஞான மார்க்கத்தை போதிக்க வேண்டினர். அதற்கு சிவபெருமான், விளக்கத்தால் உணர்வதல்ல ஞானம் அனுபவத்தால் உணர்வது என்று கூறி, சின் முத்திரை காட்டி தெற்குமுகமாக மவுன நிøயில் கல்லால மரத்தடியில் ஞான சொரூபமாக அமர்ந்தருளினார். அதாவது ஆணவம், கன்மம் (புண்ணிய பாவங்கள்), மாயை (இவ்வுலக வாழ்வே நிலையானது என்ற எண்ணம்) ஆகியவற்றை ஒடுக்கி விட்டால் (விரித்த மூன்று விரல்கள்), சுட்டுவிரலான ஜீவாத்மா (உயிர்கள்) பெருவிரலான பரமாத்மாவை (இறைவன்) அடைந்து விடலாம் என்பதே அவர் போதித்த ஞானத்தில் விளக்கம்.
தெட்சிணாமூர்த்தி வழிபாடு
தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.
வியாக்யான தெட்சிணாமூர்த்தி
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
குருவின் சின்முத்திரை
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment