மிகச் சிறந்த பக்திமான் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
தாயின் கருவில் இருக்கும் போதே மந்திர உபதேசம் கேட்ட தெய்வீகக் குழந்தை பிரகலாதன். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துஇருக்கிறார் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து சொன்னவன். அவனைக் காக்க மகாவிஷ்ணு நரசிம்மராகத் தூணில் இருந்து வெளிப்பட்டார். பெயருக்குமுன் பக்த என்ற அடைமொழியையும் சேர்த்து பக்த பிரகலாதன் ஆனான்.
குடும்பத்தில் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
அர்த்தநாரீஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிப்பதாக வேண்டிக் கொண்டாலும் நற்பலன் உண்டாகும்.
மனிதவாழ்வுக்கு வழிகாட்டுவதில் சிறந்தது ராமாயணமா, மகாபாரதமா?
தந்தை தசரதரின் வாக்கை(சத்தியத்தை) காப்பாற்ற ராமர் ஆட்சியைத் துறந்து காட்டுக்குச் சென்றார். துரியோதனனின் சூழ்ச்சியை முறியடித்து, பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்த கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டினார். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது சத்தியமும், தர்மமும். இதில் உயர்ந்தது என்றால் இரண்டுமே அவசியம் தான்.
சனீஸ்வரர் என்றாலே கஷ்டம் தருபவர் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர் சந்தோஷமும் தருவாரா?
மனிதனின் ஆயுளுக்கும், தொழிலுக்கும் காரணமாக இருப்பவர் சனீஸ்வரர். நேர்மை தவறாமல் கடமையில் கண்ணாக இருப்பவர்களை அவர் ஒன்றும் செய்வதில்லை. கெடுப்பதில் மட்டுமல்ல, கொடுப்பதிலும் சனீஸ்வரருக்கு இணையானவர் வேறு யாருமில்லை.
ஆதித்ய ஹ்ருதயம் என்றால் என்ன? அதன் பயன் என்ன?
ராமபிரானுக்கு அகத்தியர் உபதேசித்த மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம். சூரியனுக்குரிய இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் ஆரோக்கியம், ஆத்ம பலம் உண்டாகும்.
.
கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்
No comments:
Post a Comment