Saturday, December 22, 2012

ஈடில்லா ஏகாதசி விரதம்

                        
                       ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை, ஏகாதசிக்கு ஈடான விரதம் இல்லை’ என்பார்கள். விரதங்களில் சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் வரும் திதி ஏகாதசி. மாதத்திற்கு இரண்டு என என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசி வரும். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசி அன்று விரதம் இருந்து, மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள். ஏகாதசிகளில் மகிமை நிறைந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு பகல், இரவு மாறி மாறி வருவது போல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம்.

தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயணம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களை பொருத்தவரை மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தம். அதனால் மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.

                  முரன் என்ற அரக்கனை அழிக்க தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹாரம் செய்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியில் விரதம் தொடங்க வேண்டும். அன்றைய தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள். ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பால், பழம் உண்ணலாம்.
                            
விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட பாடல்களை பாடலாம். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபதவாசலை கடந்து வருவது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண்விழிக்க வேண்டும். மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய், உள்பட 21 காய்கறிகளுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் பரமபதநாதனை தரிசிப்போம்.. நம் பாவங்கள் தீர பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment