மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
விரதமும் பலன்களும்
ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்களை, நலன்களை தரும் என கூறப்படுகிறது. எந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
சித்திரை ஏகாதசி:
விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.
வைகாசி:
கைலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன்.
ஆனி:
சொர்க்கம் செல்லும் பாக்யம்.
ஆடி:
ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம்.
ஆவணி:
குழந்தை பாக்யம் கிடைக்கும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தைகளின் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மலரும்.
புரட்டாசி:
நிம்மதியான வாழ்வு.
ஐப்பசி:
சகல வளங்களும் உண்டாகும்.
கார்த்திகை:
மகிழ்ச்சியான வாழ்வு.
தை:
பித்ரு சாபங்கள் நீங்கி முன்னோர் அருளாசி கிடைக்கும்.
மாசி:
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.
பங்குனி:
தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.
கீதை தந்த ஏகாதசி
பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் பிரகாரத்தை சுற்றி வரும் இடத்தின் வடக்கு பகுதியில் பரமபத வாசல் அமைந்திருக்கும். ஆண்டுக்கு ஒருநாளில் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே திறக்கப்படும்.
குருஷேத்திர போரின்போது வைகுண்ட ஏகாதசியன்று தான் அர்ஜுனனுக்கு தனது உபதேசங்களை (பகவத் கீதை) பகவான் கிருஷ்ணர் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் உள்ள சொர்க்க வாசல் ‘வைகுண்ட துவாரம்’ எனப்படுகிறது.
ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை உணவு, உறவு வைப்பது கூடாது என கூறப்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டே இந்துக்கள் இந்த நாளில் திருமண நிகழ்ச்சிகளை தவிர்க்கின்றனர்.
திருப்பதியில் வரும் 23-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான ஆகம பண்டிதர்கள், வேத பண்டிதர்கள் இணைந்து தயாரித்த தேவஸ்தான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் 24-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளை சிவப்பு ரத்ன அங்கியிலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை முத்தங்கியிலும் தரிசிக்கலாம். வைரஅங்கி, புஷ்ப அங்கி சேவையும் பல தலங்களில் விசேஷம்.
ஏகாதசியன்று செய்யக்கூடாதது?
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்
No comments:
Post a Comment